பிரிட்டிஷாரிடம் அடிமைகளாய் இருந்த இந்திய மக்களை மீட்க ஏராளமான தலைவர்கள் அவரவர் வழியில் போராடினார்கள். மிதவாதம், தீவிரவாதம் என இரண்டு வழிகளில் போராட்டம் நடத்தினார்கள். தங்கள் சொத்துக்கள், பதவிகள் என பலவற்றை இழந்து இந்தியாவிற்காக தன்னலமில்லாமல் உழைத்தார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார், வாஞ்சிநாதன், பாபா சாகேப் அம்பேத்கர், மெளலானா அபுல் கலாம் ஆசாத், அன்னி பெசன்ட் அம்மையார், வினோபா பாவே, ராஷ்பிஹாரி போஸ், சித்தரஞ்சன் தாஸ், அரவிந்த கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, ஜார்ஜ் ஜோசப், கிருபளானி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், பகத்சிங், சாவர்க்கர், பாலகங்காதர திலகர் இன்னும் பலர் இந்திய
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களாவர்.
ஜானகிநாத் போஸ் வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தனது படிப்பை முடித்ததும் சிலகாலம் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். வங்காள மாநிலத்திலிருந்து ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் நகருக்கு 1885ஆம் ஆண்டு குடிபெயர்ந்து அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். வங்க மாநில சட்டசபை மேலவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
1905ஆம் ஆண்டில் ஆங்கிலேயே அரசு ஜானகிநாத் போஸை அரசு வழக்கறிஞராக நியமித்தது. அவருக்கு ராவ் பகதூர் எனும் சிறப்புப் பட்டத்தையும் வழங்கி கெளரவித்தது. அந்நாட்களில் ஆங்கிலேயே அரசுக்கு சாதகமாக நடந்து அவர்களைப் புகழ்ந்து தள்ளும் பெரிய மனிதர்களுக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டு வந்தது. ஜானகிநாத் போஸ், ராஜாராம் மோகன்ராயின் பிரம்மசமாஜ இயக்கத்தில் உறுப்பினராய் இருந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். 1917ஆம் ஆண்டில் நீதிபதியுடன் ஜானகிநாத் போஸிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். ராவ்பகதூர் பட்டத்தையும் 1930ஆம் ஆண்டில் துறந்தார்.
சுபாஷின் தந்தையார் மட்டுமில்லாமல் அவரது முன்னோர்களும் மிகச்சிறப்பான வாழ்க்கையையும் பெரிய பதவிகளையும் வகித்திருக்கிறார்கள். சுபாஷின் முன்னோர்களில் ஒருவர் மகபதி போஸ். இவர் வங்காள மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார். மகபதி போஸ் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றி சிறப்பு பெற்றிருக்கிறார். இவரைப் போன்று கோபிநாத் போஸ் என்பவர் முன்னர் வங்காள மன்னரிடம் கடற்படை தளபதியாக பணியாற்றி இருக்கிறார்.
சுபாஷின் அன்னை பிரபாவதி அம்மையாரின் தந்தையார் காசிநாத் தத் ஒரு மிகச் சிறந்த அறிஞர். காசிநாத் தத் ஒரு செல்வந்தரும் கூட. சுபாஷின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் பதின்மூன்று பேர்கள். சுபாஷையும் சேர்த்து ஜானகிநாத் போஸ் பிரபாவதி தம்பதியினருக்கு பிரமிளா, சரளா, சதீஷ்சந்திரா, சரத்சந்திரா, சுரேஷ்சந்திரா, சதீர்சந்திரா, சுனில்சந்திரா, சாருபாலா, சுபாஷ்சந்திரா, மாலினா, புரோஹிவா, கனகலதா, சைலிஷ்சந்திரா, சந்தோஷ் சந்திரா என மொத்தம் பதினான்கு குழந்தைகள் இருந்தனர். சுபாஷ் சந்திரபோஸை அவரது பெற்றோர் செல்லமாக ‘சுபி’ என்று அழைத்தார்கள்.
சிறுவன் சுபாஷ்
சுபாஷின் அன்னை பிரபாவதி தெய்வநம்பிக்கை மிக்கவராய் விளங்கினார். இதனால் சுபாஷ் சிறுவயதில் அன்னையிடம் கோயிலுக்குச் செல்லும் சமயங்களில் கடவுள்களைப் பற்றி கேட்டு அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். அன்னை சொன்ன விளக்கங்கள் சுபாஷின் மனதில் ஆழமாய்ப் பதிந்தன. சுபாஷ் சிறுவயதில் பல கேள்விகளை தன் அன்னையிடம் கேட்பார்.
ஒருநாள் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சில அனாதைச் சிறுவர்களைப் பார்த்தார் சுபாஷ்.
“அம்மா, இந்த சிறுவர்களெல்லாம் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?”
“அவர்கள் அநாதைகள் சுபி. அதனால்தான் பிச்சை எடுக்கிறார்கள்.”
“அவர்களுக்கென்று யாருமே இல்லையா அம்மா?”
“ஏன் இல்லை. இவர்களைப் போன்ற அநாதைகளுக்கெல்லாம் கடவுள் துணையாய் இருக்கிறார்”
“அப்படியென்றால் அவர் இவர்களை எல்லாம் ஏனம்மா பிச்சை எடுக்க வைக்கிறார்?”
“இந்த சிறுவர்களின் பெற்றோர் செய்த பாவம்தான் இதற்கெல்லாம் காரணம் சுபி”
“அப்படியென்றால் நீங்கள் பாவம் ஏதும்செய்யவில்லை.
அதனால்தான் நானும், என்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழுகிறோம் அப்படித்தானே அம்மா?”
சுபியின் இந்தக் கேள்வி அன்னையை திகைக்க வைத்தது.
“அப்படித்தான் சுபி”
அன்னை சுபாஷை செல்லமாக தட்டிக்கொடுத்து முத்தமிட்டார்.
சுபாஷின் பள்ளிப்பருவம்
சுபாஷ் சிறிய வயதில் பள்ளிக்கு செல்ல மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். காரணம் அவரது சகோதர்கள் மற்றும் சகோதரிகள் தினமும் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து சுபாஷிற்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஐந்து வயது பூர்த்தியானதும் சுபாஷின் பெற்றோர். சுபாஷை பள்ளிக்கு அனுப்ப முடிவெடுத்தனர். ஒரு குதிரை வண்டி வரவழைக்கப்பட்டது. பள்ளிக்குச் செல்ல இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சிறுவன் சுபாஷ் அதில் தாவி ஏறி உட்கார முயற்சி செய்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக வண்டி முன்னே நகர சுபாஷ் கீழே விழுந்து விட்டான். சிறுவன் சுபாஷிற்கு பலத்த அடி பட்டுவிட்டது. சுபாஷின் முதல் பள்ளி அனுபவம் இப்படி ஆகிவிட்டது. வீட்டில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சுபாஷ் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
ஐந்து வயது நிரம்பியதும் சுபாஷ் கட்டாக் நகரில் உள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் ஆங்கில நாட்டுப் பாணியில் அமைந்த கல்வியைப் பயின்றார். இக்கல்வி முறை சுபாஷிற்குப் பிடிக்கவில்லை. இதன் பின்னர் கல்கத்தாவில் இருந்த ரேவன்ஷா கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 1913ல் தனது மெட்ரிகுலேஷன் படிப்பைத் தொடர்ந்து முடித்தார்.
சுபாஷ் தனது பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கினார். ஒரு நாள் அவரது வகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிaர்கள் என்று ஒரு கேள்வியை வினவினார். மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்களின் ஆசைகளை தெரிவித்தார்கள். பின்னர் அவரவர் எதிர்கால ஆசைகளை ஆசிரியர் ஒரு கட்டுரையாக எழுதுமாறு சொன்னார். சுபாஷ் தான் ஒரு நீதிபதியாக வர விரும்புவதாக ஒரு கட்டுரையினை எழுதினார். நீதிபதியாக இருந்தால் நேர்மையாக பல நல்ல தீர்ப்புகளை எழுதி நிரபராதிகளைக் காப்பாற்றலாம் என்ற நினைப்பே இதற்குக் காரணமாகும்.
சுபாஷ் கல்வி பயின்ற பள்ளியில் பென்னி மாதவதாஸ் என்றொரு தலைமை ஆசிரியர் புதிதாக நியமிக்கப்பட்டார். இவர் மிகச் சிறந்த கல்விமான். கல்வியை சிறப்பாக பயிற்றுவிப்பதில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் மிகச்சிறப்பாக போதித்தார். பென்னி மாதவதாஸின் இந்தச் செயல் சுபாஷை ஒரு நேர்மையான மாணவனாக மாற்றியது.
புதிய தலைமை ஆசிரியருக்கு சுபாஷை மிகவும் பிடித்திருந்தது. அதுபோலவே சுபாஷிற்கும் புதிய தலைமை ஆசிரியரை மிகவும் பிடித்திருந்தது. அவரது கனிவு கலந்த, கண்டிப்பு மிக்க பார்வை சுபாஷை வெகுவாகக் கவர்ந்தது. சுபாஷ் அப்போது ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். சுபாஷ் ஏழாம் வகுப்பிற்கு வந்தபோது தலைமை ஆசிரியர், சுபாஷின் வகுப்பிற்கு வந்து பாடம் நடத்தினார். அவரது பாடம் கற்பிக்கும் முறை வித்தியாசமாக இருந்தது. மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு போன்ற விஷயங்களை அவர் கற்பித்தார். பல உதாரண புருஷர்களின் கதைகளையும் சொன்னார். இவை மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் நல்ல ஒழுக்கத்தையும் கற்பித்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக தலைமை ஆசிரியர் திடீரென்று வேறு இடத்திற்கு மாற்றல் உத்தரவைப் பெற்றார். இந்த விஷயத்தை அறிந்ததும் சுபாஷ் கவலையடைந்தார். ஒரு நல்ல தலைமை ஆசிரியரை இழக்கப்போகிறோம் என்பதை நினைத்து அவரது மனம் கவலையடைந்தது. தலைமை ஆசிரியருக்கு பள்ளியின் நிர்வாகம் பிரிவு உபசார விழா ஒன்றை சிறப்பாக நடத்தியது. அதில் பள்ளி நிர்வாகிகளும் ஊரில் இருந்த முக்கிய மனிதர்களும் கலந்து கொண்டு தலமை ஆசிரியரை பாராட்டிப் பேசினார்கள். பின்னர் மாணவர்களின் சார்பாக சிலர் பேசினர். சுபாஷிற்கும் மேடையேறி தலைமை ஆசிரியரை பாராட்டிப் பேச வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. உடனே சுபாஷ் பேசினார். முதல்முறையாக சுபாஷ் மேடையேறிப் பேசினார். அவரது கருத்தாழமிக்க பேச்சு அனைவரையும் வியக்க வைத்தது. சுபாஷின் பேச்சுத்திறமை முதன்முதலாக பள்ளி மேடையில் வெளிப்பட்டது.
சுபாஷ் சராசரி மனிதர்களிடமிருந்து மாறுபட்டு விளங்கினார். சாதாரண மனிதர்களைப் போல பணம், பதவி, புகழ், குடும்பம் என எதன் மீதும் அவர் ஆசை வைக்கவில்லை. அவரது லட்சியம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. சுபாஷின் லட்சியத்தில் ஒரு சதவிகிதம் கூட சுயநலம் இல்லை. அவரது இலட்சியம் மிக உயர்ந்ததாக இருந்தது. இந்திய நாட்டின் சுதந்திரமே அவரது உயிர்மூச்சாக இருந்தது. இவர் இதற்காக அனுபவித்த துன்பங்கள் பல. சுபாஷ் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய காரணத்திற்காக பதினோரு முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் அவர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
ஆங்கில கல்விச்சாலையில் ஏழு வருடங்கள் பயின்ற சுபாஷ் பின்னர் வங்காள மொழியை முதன்மையாகக் கொண்ட ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆங்கிலக்கல்வியில் பயின்றதன் காரணமாக சுபாஷ் வங்க மொழியில் தேர்ச்சியின்றி இருந்தார்.
ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் வங்காள மொழியில் கட்டுரை ஒன்றை எழுதும்படி வகுப்பு மாணவர்களிடம் சொன்னார். மற்ற மாணவர்கள் கட்டுரையை நன்றாக எழுதினார்கள். காரணம் அவர்கள் அனைவரும் முதல் வகுப்பிலிருந்தே வங்கமொழியில் கல்வி பயில்பவர்கள். வங்க மொழியில் அவ்வளவாக தேர்ச்சி இல்லாத சுபாஷ் எழுதிய கட்டுரையில் ஏராளமான எழுத்துப் பிழைகள் இருந்தன. சுபாஷ் எழுதிய ஏராளமான தவறுகள் கொண்ட அந்த கட்டுரையை படித்த ஆசிரியர் எரிச்சலடைந்து, அந்த கட்டுரையை சத்தமாக வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு படித்துக் காட்டினார். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள் கொண்ட அக்கட்டுரையை ஆசிரியர் படிக்கும்போது சகமாணவர்கள் கேலியாக சிரித்தனர். இது சுபாஷிற்கு கோபத்தையும் ரோஷத்தையும் வரவழைத்தது. தன்னை ஏளனம் செய்யும் ஆசிரியருக்கும் சகமாணவர்களுக்கும் தான் யார் என்பதைக் காட்ட வேண்டும். என்ற ரோஷத்துடன் தீவிரமாக வங்க மொழியைப் பயில ஆரம்பித்தார் சுபாஷ். பின்னர் நடைபெற்ற வங்கமொழித் தேர்வில் மிகச்சிறப்பாக கட்டுரை எழுதி ஆசிரியர் உட்பட அனைவரையும் வியக்க வைத்தார்.
சுபாஷின் நண்பர்கள் சுபாஷைப் போலவே ஒழுக்கமாகவும் நல்ல உள்ளம் படைத்தவர்களாகவும் இருந்தனர். சுபாஷிற்கு விளையாட்டில் ஆர்வமில்லை. தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் அதிக அளவில் ஈடுபாடு காட்டினார். சுபாஷின் வீட்டின் பின்புறம் ஒரு தோட்டம் இருந்தது. அதில் பூச்செடிகளை வைத்து வளர்ப்பதில் சுபாஷ் அதிக ஈடுபாடு காட்டினார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்