1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட திருக்கோவில் இது!
தமிழ் நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு இருக்கும்.குறிப்பாக மதுரை,சிதம்பரம்,தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்கள் கோயில்களுக்கு புகழ் பெற்ற இடங்களாக விளங்கி வருகின்றன.
இந்த கோயில் நகரங்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள நகரம் வேலூர்.இங்குதான் உலகப்புகழ்பெற்ற பொற்கோவில் அமையப்பெற்றிருக்கிறது.
இந்திய நகரங்களில் வேலூர் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.முதல் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டையில்தான் நடைப்பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.பொம்மி நாயக்கர்,ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் வேலூரை ஆட்சி செய்திருக்கிறார்கள்.
அவர்களின் ஆட்சியைப் பறைசாற்றி வேலூர் மாநகரில் நிமிர்ந்து நிற்கிறது வேலூர் கோட்டை அதோடு ஆசியாவில் புகழ் பெற்ற
சி.எம்.சி.மருத்துவமனை,வேலூரின் டிரேட் மார்க் முத்திரையான மத்திய சிறைச்சாலை போன்றவை வேலூருக்கு அழகு சேர்த்திருந்தாலும் இவை சுற்றுலாப் பயணிகளை பெரியளவில் கவரவில்லை.அதனால் வேலூரின் பெயர் பெரியளவில் இந்தியாவில் பேசப்படவில்லை.
ஆனால் திடீர் பிரவேசம் செய்திருக்கும் பொற்கோவில் வேலூரின் புகழை உலகமெங்கும் பேசவைத்திருக்கிறது.
பெங்களுர்,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிருந்தெல்லாம் ஸ்ரீபுரத்திற்கு சிறப்பு பஸ் சேவை நடத்தப்பட்டு வருகிறது.நாம் சென்னையிலுருந்து வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு சுமார் நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வேலூர் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றோம்.
இருவருக்கு பதினைந்து ரூபா கொடுத்தோம்.வேலூர் மத்திய சிறைச்சாலையை ஒட்டியே ஸ்ரீபுரம் வழி அமைந்திருக்கிறது.வழி நெடுகிலும் புளிய மரங்கள் வானுயர வளர்ந்திருக்கிறது.பொற்கோவில் அமைந்திருக்கும் மலைக்கோடி ஒரு காலத்தில் ஆள் அரவமற்ற காடாக இருந்ததாம்.அங்குதான் சித்தர்களும்,யோகிகளும் தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதே இடத்தில் நாராயணியை நினைத்து சக்தி அம்மா தியானம் செய்து அம்மனின் அருளைப்பெற்று தங்கக் கோயில் அமைத்தார்.என்று ஆட்டோக்காரர் ஆறுமுகம் எம்மிடம் உணர்ச்சிப்பொங்க கூறினார்.
கோயில் வாசலில் வந்திறங்கி பிரதான வாயிலுக்கு சென்றோம்.அங்கே மெட்டல் டிடக்டர் கருவிகளோடு கோட் சூட் போட்ட காவலர்கள் பாதுகாப்பில் இருந்தார்கள்.உலோகத்தை கண்டுப்பிடித்துக் காட்டும் பெரிய வாசலில் நுழைந்துதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.செல்போன்,கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
![]() |
ஸ்ரீநாராயணி அம்மன் |
![]() |
சக்தி அம்மா குறி சொன்ன
பாம்பு புற்று
|
‘மற்றவர்களைச் சந்தோசப்படுத்தும் போது உங்களுக்கு கிடைக்கும் சந்தோசம் ஒரு சிறப்பு தன்மையுடையது. அதுதான் ஆனந்தம் அதுதான் உங்களை தெய்வம் ஆக்குகிறது.’என்ற சிந்தனை வாக்கியத்தை வாசித்தப்படியே நடந்தோம்.வழமையாக கோயில்கள் என்றால் உண்டியல்தானே இருக்கும்!ஆனால் இங்கே கோட் சூட் அணிந்த டிப்டொப் இளம் பெண்கள் கணனி மொனிட்டர்களுக்கு முன்னால் அமர்ந்து கிரெடிட் கார்ட் மூலமாக கிடைக்கும் நன்கொடைகளை சேமித்து கொண்டிருந்தார்கள்.
கோயில் வளவுக்குள்ளேயே அன்னலட்சுமி சைவ உணவகம் நிமிர்ந்து நிற்கிறது.நாலு மாடி கட்டிடத்தை கொண்ட அந்த சைவ உணவகத்தில் நாவுக்கு ருசியாக விருந்து படைக்கிறார்கள்.நாராயணி அம்மனின் லட்டு ஒன்று ரூபா பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. நட்சத்திர வட்டத்தை சுற்றி முடித்து இறுதியாக தங்கக் கோயிலை அண்மித்தோம்.சூரிய ஒளிபட்டு அந்த இடமே ஜொலித்து கொண்டிருந்தது.
சக்தி அம்மா |
பொற்கோவில்காரர்கள் ரொம்பவும் உசாராகத்தான் இருக்கிறார்கள்.நம்மவர்களுக்கு கோவிலை தொட்டுப் பார்க்கவே முடியாது.சாமியை கும்பிட்டோமா திரும்பினோமா என்றுதான் இருக்க முடியும்.தங்கச் சுவரை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து நம்மவர்களிடம் இருந்து தங்கத்தை காப்பாற்றி வருகிறார்கள்.
பொற்கோவிலின் கொள்ளை அழகை ரசிக்கவே உலக முழுவதிலிருந்தும் சகல மதத்தினரும் வருகை தருகிறார்கள்.இங்கு வரும் பக்தர்கள்,பார்வையாளர்களில் குறிப்பாக தமிழர்களைவிட வெளி மாநிலத்தவர்களே அதிகமாக வருகை தருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.வேலூருக்கு பக்கத்தில் ஆந்திரா இருப்பதால் திருப்பதிக்கு மொட்டை போட வருபவர்கள்,அங்கு மொட்டை போட்டு முடிந்ததும் நேராக கோல்டன் டெம்பலுக்கு ஒரு விசிட் அடித்து விடுகிறார்கள்.
காலை 7மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும் பொற்கோவிலில் தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.இரண்டாயிரம் ஆண்டில் தொடங்கிய பொற்கோவிலின் கட்டுமான பனிகள் 2007 ஆம் ஆண்டில்தான் முடிவடைந்திருக்கிறது.மொத்தமாக ஏழு ஆண்டுகளில் பொற்கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.மொத்தமாக 300 கோடி செலவானதாக கோயில் நிர்வாகத்தினர் சொல்கிறார்கள்.
1500 கிலோ தங்கத்தை எப்படிங்க வெளியில இருந்து கொண்டு வந்தீங்க?என்று கோயில் நிர்வாக சபையில் அங்கத்தினராக இருக்கும் கார்த்திக்கிடம் கேட்டோம்
“எல்லாம் நாராயணி அம்மனின் அருளால் நடந்தது.இந்த கோவில் உருவானது ஒரு கனவு மாதிரி…ஆனால் சட்டப்படி அரசாங்கத்தின் அனுமதியோடுதான் நடந்தது.அப்துல் கலாம்,கலைஞர்,அத்வானி என்று பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் தங்கக் கோயிலுக்கு வந்திருக்கிறார்கள்.இதற்க்கான பணம் அனைத்தையும் வெளிநாடுகளில் வாழும் சக்தி அம்மாவின் பக்தர்கள் வழங்கியது என்று சுருக்கமாக பதிலளித்தார் அவர்.
சக்தி அம்மா தொண்ணூறாம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில் மலைக்கோடியில் ஒரு பாம்பு புற்றின் அருகில் அமர்ந்து நாராயணி அம்மனின் சக்தியோடு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி வந்திருக்கிறார்.அவரின் பெரும் முயற்சியால்தான் இந்தியாவுக்கு ஒரு தங்கக் கோயில் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இருந்த அமிர்தசரஸ் தங்கக் கோயிலை இப்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருக்கிறதாம் இந்த வேலூர் தங்கக் கோயில்.
கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளே நிலப்பரப்பில் நூற்றி ஐம்பது கட்டில்களோடு நூறு வைத்தியர்களைக் கொண்ட பெரிய வைத்தியசாலை ஒன்றும் இயங்குகிறது .இந்த வைத்தியசாலையில் 24மணி நேரமும் பிரசவம் பார்க்க படுகிறதாம்.ஒருவருக்கு ரூபா 500 கட்டணமாக பெறுகிறார்களாம்.இதுவரை 320 சிறுவர்களுக்கு சக்தி அம்மாவின் கருணையால் இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
இது தவிர தாதியர் பயிற்சிக் கல்லூரி,ஆராச்சிக்கூடம்,பாடசாலை,தங்கும் விடுதி என்று எங்கு பார்த்தாலும் பொற்கோவிலுக்கு சொந்தமான
கட்டடங்கள்தான்.இதில் வரும் வருமானம் தற்போதைக்கு சக்தி அம்மாவுக்கு சொந்தம் என்றாலும்,அவருக்கு பிறகு அவை அரசுடமை ஆக்கப்படுமாம்.
இக்கோவில் பற்றி சாதாரன மக்களிடம் கேட்டோம்.பொற்கோவிலின் வருகைக்கு பிறகுதான் இந்திய வரை படத்தில் வேலூர் தெரிகிறது.அது நமக்கு பெருமை தானே!என்றார் கருப்பையா என்ற வேலூர் வாசி.சி.எம்.சி மருத்துவமனையில் தொழில்புரியும் மருதநாயகம் என்பவர் “பொற்கோவில் வேலூருக்கு கிடைத்த ஒரு பெரிய சுற்றுலா தளம்”என்கிறார்.
“இதனால் பலர் வயிறுபிழைக்கிறார்கள்.ஆட்டோகாரர்கள்,வியாபாரிகள்,விடுதி உரிமையாளர்கள் என்று பலருக்கும் வேலை கிடைத்திருக்கிறது.இந்த நகருக்கு பெருமளவில் வருமானம் வருகிறது.ஆனாலும் ஒரு குறை.சக்தி அம்மா நாராயணி அம்மாவின் பக்தர்தானே பின் எதற்காக அவரின் படத்தை நாராயணி அம்மாவுக்கு சமமாக போட்டு கோயில் தெருவெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்கள்?அவர் ஆண்டவனின் அவதாரமா?”என்ற கேள்வியை எம்முன் வைத்தார்.இதற்க்கான பதிலை இந்திய பக்தர்கள்தான் சொல்ல வேண்டும்.நாம் அல்ல என்று கூறியவாறே அவரிடமிருந்து விடைபெற்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்