ஓம்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்
சாரம்:
யானையினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன்.
விரதம்:
மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்.
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங் கருதி செய்யுஞ் சமய அனுட்டானங்களில் விரதமும் ஒன்று. விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் இதுவும் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.
உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே
வசித்தல் என்ற பொருளைத் தரும். ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசமாகும்.
பிள்ளையார் பெருங்கதை - விநாயகர் விரதம்
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விரதம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப் பிடிக்கப்பெறுகிறது.
சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது. இவ்விரதம் இவ்வருடம் 18.11.2013 திங்கட்கிழமை ஆரம்பமாகி 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணிக்கின்றது.
இருபத்தோரிழையோடு கூடிய காப்பை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டி விரதத்தை ஆரம்பிப்பர். முதல் இருபது நாட்களும் ஒவ்வொரு பொழுது உணவு உண்டு இறுதி நாள் உபவாசம் இருந்து சுவாமி தரிசனம் செய்து உணவுண்டு இவ்விரதம் நிறைவு செய்யப்படும். இருபத்தொரு நாட்களும் விநாயகரது கதை கேட்பதும், விநாயகர் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேட அபிஷேகங்கள், பூசைகள் நடைபெற்றபின் அகத்திய முனிவரால் எழுதப்பட்ட பிள்ளையார் கதையை கற்றுத் தேர்ந்தோர் பாடிப் பயன் சொல்ல விரதமிருப்போர் இருந்து கேட்டுப் பயன்பெறுவர்.
இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர். "சாந்த" வழிபாடுகள் செய்யும்மக்கள் விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தியை வணக்க உடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.
யாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாடு நடைபெறும் ஆலயங்கள் பல இன்றும் உள. சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்