
தேர்த்திருவிழா மகிமை
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்த பொருளாக விளங்குகிறான் என்பதை வேதம் விளக்குகின்றது. “ரதேப்யோ ரதபதிப்யஸ்ச வோ நம” என்றபடி இறைவனே தேராகவும் அவனே தேரில் விளங்கும் தலைவனாகவும் வேதம் சொல்லுகின்றது, இப்பெருமை வாங்ந்த தேர்த்திருவிழாவை நாம் வருடாவருடம் நமது திருக்கோவிலில் கொண்டாடுகின்றோம்.
இத்தேர்த்திருவிழாவின் மகத்துவத்தை நாம் சற்றே நோக்குவோம்.
அசையாப்பொருளை அசையும் பொருளாக செய்வதன் பொருட்டே இத்தேர் மரத்தினால்
செய்யப்படுகின்றது. இது கீழே ஏழு தட்டுக்களாகவும் மேலே ஏழு தட்டுக்களாகவும்
கோப்பு வடிவில் அமைக்கப்படுகின்றது. இந்த கீழ் ஏழு தட்டுகள் அதலம் முதலிய
பாதாளம் ஏழாகவும் மேல் ஏழு தட்டுக்கள் மேல் ஏழு உலகங்களாகவும்
கருதப்படுகின்றன. நடுவில் உள்ள 12 கால்களும் 12 சூரியர்களாகவும் சூரியனைச்
சுற்றுவதாக உள்ள இப்பூவுலகம் தர்மம், ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம் இவைகளைச்
சூழப்பட்டதாக கருதி நடுவில் 4 தூண்களும் அமைக்கப்படுகின்றன. ஆக
இப்பூவுலகமாகக் கருதப்படும் இத்தேரில் உயிர்களின் பிரதியாக தலைவனாக இநைவன்
கொலுவைக்கப்படுகின்றான். மேலும் இத்தேர் உயிர்களின் 14 பிறப்புக்களின்
உணர்வாகக் கருதப்பட்டு நடுவிலே எட்டாவதாக மனிதப்பிறப்பின் வெளிப்பாடாக தளம்
அமைக்கப்படுகின்றது. இத்தேரில் வீற்றிருக்கும் இறைவன் மகிழ்வாகக்
கொண்டாடப்படுவது போல் மனித வாழ்க்கையும் மன மாத்சர்யங்கள் நீக்கப்பட்டு
மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற தத்துவத்தை பகவத் கீதையில் ‘ஆத்மானம் ரதினம்
வித்தி சரீரம் ரதமேவச’ என்று பகவான் சொன்னது போல் உடல் தேராகவும் உயிர்
கடவுளாகவும் கருதப்பட்டு மகிழ்ச்சியை எல்லோரும் ஒன்று கூடி கொண்டாட
வேண்டும் என்ற பொருளாக இத்தேர்த் திருவிழா கொண்டாடப்படுகின்றது.
மேலும் திருக்கோவில் திருவிழாக்கள் இறைவன் நமக்கு செய்யும்
ஐந்தொழிலின் விளக்கங்களாகவே திகழ்கின்றன. அங்குரார்ப்பனம் ஆக்குதலாகவும்,
கொடியேற்றம் காத்தலாகவும், தேரோட்டம் கரத்தலாகவும், பரிவேட்டை
மறைத்தலாகவும், தீர்த்தவாரி அருளலாகவும் திகழும்.
இத்தனைச் சிறப்புமிக்க பிரம்மோத்ஸவம் நமது இணுவில் ஸ்ரீ
பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவிலில் தொன்றுதொட்டு வழுவாது இவ்வருடமும்
நடைபெறுகின்றது. இத்தேர்த்திருவிழா அமைதியும்,வளமும் நலமுடன் ஓங்கவும்,
பயமின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும் மங்களங்கள் பெறுகவும்
வேண்டுகின்றேன்.
சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக்குருக்கள்
சிவஸ்ரீ சோ.அரவிந்தக்குருக்கள்
இணுவைப் ஸ்ரீபரராசசேகரன் தேர்ப்பவணி காணவந்திடுவீர்
பஞ்ச முகன் பார்வதி மைந்தன் ஸ்ரீபரபாச சேகரன்
பாரெலாம் போற்றப் பவணி வருகின்றான்
தஞ்ச மென்று அடைந்தவர் உள்ளத்தில் தங்கியருள்
பொழியும் தாயானவன் தந்திமுகன்
பிஞ்சுமனங்களில் புகுந்திடுவான் பொருபணிகள் செய்யத
தூண்டிடுவான் தூயருள்ளத்தில் குடியிருப்பான்
கொஞ்சும் சலங்கை ஒலித்திட தேரினில் பவனிவருகின்றான்
கேட்டவருக்குக் கேட்டபடி வாழ்வுதர வருகின்றான்.
சிற்ப மொடு சித்திரங்கள் கதை பேசும்
சிங்காரத் தேரினில் பவனி காண அடியவர்
கற்பூரச்சட்டிகள் ஏந்துகிறார் காவடிகள் பல எடுக்கின்றார்
அங்கப் பிரதட்சணமும் செய்கின்றார்
நாட்புறமும் மாவிலைத் தோரணமும் நடுவே நிறை குடமும்
குத்துவிளக்குகள் ஏற்றிவைத்தார் தூபதீபம் காட்டுகிறார்
அந்தணர் வேதம் ஓதுகிறார் ஓங்காரத்துட்பொருள்ளானவன்
சிங்காரப் பவணிகாண வந்திடுவீர்.
ஆக்கம் பண்டிதை வை.கணேசபிள்ளை ஆசிரியர்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்