மேனை
“ஜீயார்”
இமவான், பர்வதங்களின் அரசன்.
பர்வதராஜனின் பத்தினி மேனை. ஔஷதிபிரஸ்தத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி
செய்து வந்தான். அவர்களுடைய தவப்பயனாக உமாதேவியே மகளாகத் தோன்றினாள்.
பர்வதராஜனின் புத்திரியாக பார்வதியாக, சிவபெருமானைக் குறித்து தவம்
செய்யலானாள். சிறுபெண்ணாக, பார்வதி தவம் செய்வது மேனையின்
தாயுள்ளத்துக்குத் துன்பத்தைத் தந்தது.
மன்மத தகனம் ஆனதும் பரமேஸ்வரர்,
பார்வதியை மணமுடிக்க விழைந்தார். சப்த ரிஷிகளையும் அழைத்து பர்வதராஜனிடமும்
மேனையிடமும் திருமணத்திற்கு சம்மதம் பெற்றுவர அனுப்பினார். சப்தரிஷிகளும்
ஔஷதி பிரஸ்தம் நகரை அடைந்ததும் இமவான் மேனையுடன் அவர்களை வரவேற்றான்.
உபசரித்து இருக்கை தந்தான்.
“ராஜனே! பரமேஸ்வரன் உன் திருமகளை மணம் புரிந்து கொள்ள விழைகிறார். தங்கள் சம்மதம் பெறவே நாங்கள் இங்கு விந்துள்ளோம்.”
“ரிஷிகளே! நான் பாக்யம்
செய்தவனாகிறேன். புண்ணிய வினைகளின் பலனாகவே நினைக்கிறேன்.” என்று இமவான்
முகமலர தன் சம்மதத்தை வெளிப்படுத்தினான்.
ஆனால் மேனையின் முகமே வாடியது. இதைக் கண்டு ரிஷிபத்தினியாகிய
அருந்ததி, மேனையிடம் வினவினாள்.
“முன்பு சிவபெருமான் தக்ஷன் மகளை
மணந்த பிறகு, அவளை பிறந்தகத்திற்கே அனுப்பவில்லை. ஒருமுறை அவள் மீறிச்
சென்றபோது, சிவபெருமான் தக்ஷனின் தலையையே தம் வீரனைக் கொண்டு கொய்து
விட்டார். அதனால் தான் தயக்கமாக இருக்கிறது.” என்றாள் மேனை. மேனையின்
கலக்கத்தைப் போக்க, அருந்ததி சிவபெருமானின் குண சௌந்தர்யங்களையும் தக்ஷன்
செய்த தவறுகளையும் எடுத்துக் கூறிய பிறகு மேனை சம்மதம் தெரிவித்தாள்.
சப்தரிஷிகளும் மகிழ்வோடு திரும்பிவந்து இமவானும் மேனையும் இசைவு தந்ததை பரமேஸ்வரரிடம் கூறினார்கள்.
பர்வதராஜன்
விவாகத்திற்கான ஏற்பாடுளைச் செய்யலானான். தேவதச்சனான மயன், ஔஷதி பிரஸ்த
நகரை தேவலோகம் போல அலங்கரித்தான். உறவினர்களும் பல நாட்டு மன்னர்களும்
வருகை தந்தவண்ணம் இருந்தார்கள். பிரம்மாதி தேவர்களும், சர்வேஸ்வரனை
அலங்காரம் செய்து அழைத்து வந்தார்கள். கிரீடத்திலே பிறைச்சந்திரன்
ஒளிர்ந்தான். நெற்றிக்கண், திலகமாக ஒளிர்ந்தது. இடையிலே பட்டாடை,
பொன்னாபரணங்கள் திகழ காமேஸ்வரராக இளமை ததும்ப ஈசன் தோன்றினார்.
மேனைக்கு, மாப்பிள்ளையைப்
பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து, அவரைக் காண வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.
நகரத்தை நோக்கி, மாப்பிள்ளை ஊர்வலமாக வருகிறார் என்பதை அறிந்ததும் அரண்மனை
உப்பரிகைக்குச் சென்றுவிட்டாள். அவளுக்கு ஈசனைச் சுட்டிக் காட்ட நாரதர்
நின்றிருந்தார்.
மேனை பரபரப்புடன் “இதோ! அலங்காரத் தேரில் வருகிறாரே அவரா?” என்றாள்.
“இவர் இல்லை. இவர் கீதம் பாடும் கந்தர்வர்” என்றார் நாரதர்.
சிவனுடைய சந்நிதானத்தில் கீதம்
பாடுபவரே, இத்தனை அழகோடு இருக்கிறார் என்றால் சிவனும் பேரழகுடன் தான்
இருப்பார் என்று மேனை எண்ணினாள்.
அடுத்ததாக குபேரன் யக்ஷர்கள் சூழ
வருவதைக் கண்டு “இவர்தான் ஈசனா?” என்றாள். “இல்லை இவர் குபேரன்” என்று
நாரதர் கூறினார். தொடர்ந்து வருணன், இந்திரன் என ஒவ்வொருவரையும் சுட்டிக்
காட்டி மேனை கேட்க, “இல்லை” என்று கூறி, இவர்களை விட அழகும் ஒளியும்
பொருந்தியவர் பரமேஸ்வரர் என்று நாரதர் விடையிறுக்க மேனை உற்சாகமடைந்தாள்.
மாப்பிள்ளையைக் காணும் ஆவல் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று.
அப்போது ரிஷப வாகனத்தில் வந்த
சிவனை நாரதர் சுட்டிக் காட்டி, “மேனை! இதோ இவர்தான் உன்மாப்பிள்ளை”
என்றார். மேனை அவரைப் பார்த்தாள். ஐந்து முகங்கள் பத்து கரங்கள் ஜடை
விரிந்து தொங்குகிறது யானைத் தோலை ஆடையாகவும், சர்ப்பங்களை ஆபரணங்களாகவும்
அணிந்து கபாலமாலை கழுத்தில் தொங்க சூலமும் மழுவும் ஏந்தி பூதகணங்கள்
ஆர்ப்பரிக்க வரும் சிவனைக் கண்டதும் மேனை அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“ஹா! இவரா, என் செல்வ மகளை மணக்க
இருப்பவர்? ஆண்டிப் பரதேசியாய் இருப்பவரையா மாப்பிள்ளையாகத்
தேர்ந்தெடுத்தாய் என்று ஊரும் உறவும் எள்ளி நகையாடுமே!” என்று மேனை
குலுங்கி அழத் தொடங்கினாள். இதைப் பார்த்து நாரதர் திடுக்குற்றார்.
“எதற்காக துக்கப்படுகிறாய்?” என்றார்.
“எல்லாரும் சேர்ந்து என்னையும்
என் செல்வப் புதல்வியையும் ஏமாற்றி விட்டீர்களே!” என்று கதறினாள். இமவான்
விரைந்தோடி வந்து மேனையை சமாதானம் செய்தார். ரிஷிகள் அவளிடம், ஞானக் கண்
கொண்டு பார்த்தால் மட்டுமே ஈசனை அறிய முடியும் என்று கூறி அவளை ஈசனிடம்
அழைத்துச் சென்றார்கள். மேனை, பரமேஸ்வரரை நோக்கினாள். மன்மதனை வெல்லும்
அழகும் இளமையும் கொண்டு சர்வாலங்கார பூஷிதராகத் திகழ்ந்த மாப்பிள்ளையைக்
கண்டு மேனையின் முகம் மலர்ந்தது. துயரம் மறைந்தது. தன்னுடைய அஞ்ஞானத்தை
எண்ணி நாணமடைந்தாள்.
பார்வதிக்கு ஏற்றவர் இவரே என்று
எண்ணி உள்ளம் பூரித்தாள். கணவருடன் சேர்ந்து விவாஹ மஹோத்ஸவத்தைச்
சிறப்புடன் நடத்தினாள். மேனையின் வதனத்திலே சர்வலோக நாயகனை
மாப்பிள்ளையாகப் பெற்ற கர்வம் தோன்றியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்