ஆந்திராவில் உள்ள, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு, நாட்டின் பணக்கார கோவில் என்ற, பெருமை உண்டு. இங்கு, எப்போதும் பக்தர்கள் கூட்டம், நிரம்பி வழியும். சராசரியாக, நாளொன்றுக்கு, 60 ஆயிரம் பக்தர்கள், சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்களில், இந்த எண்ணிக்கை,
ஒரு லட்சமாக அதிகரிப்பது வழக்கம். இரவு நேரங்களிலும், தரிசனத்துக்காக, நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பர். அனைத்து பக்தர்களும், தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக, நாள் முழுவதும் கோவில் நடை திறந்து வைக்கப்படுகிறது. ஒரு சில நாட்களில் மட்டும், அதிகாலையில், 10 நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. மற்ற நேரங்களில், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
இந்த நடைமுறைக்கு, ஆன்மிகவாதிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "நாள் முழுவதும், கோவில் நடையை சாத்தாமல் இருப்பது, கோவில் பாரம்பரிய பழக்க வழக்கமான, ஆகம விதிமுறைகளுக்கு எதிரானது' என, அவர்கள் விமர்சித்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், ஆலோசனை நடத்தியது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், ஆகம விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இனிமேல், தினமும் அதிகாலை, 1:30க்கு கோவில் நடை சாத்தப்படும். இதன்பின், அதிகாலை, 3:00 மணிக்கு தான், நடை திறக்கப்படும். தினமும், 90 நிமிடங்கள், கண்டிப்பாக கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். இவ்வாறு, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்