அறங்காவலர்
சுப்புடையார் பரம்பரையினரின் வழித்தோன்றல்களாகிய இராமநாதர் மற்றும்
தம்பையா ஆகியோரினால், அவரவர் காலங்களிலே ஆலயம் சுண்ணாம்புக் கற்களினாலே புதிப்பிக்கப்பட்டது. 1967ம் ஆண்டு வரையில் ஆலயத்தை செவ்வனே பராமரித்து வந்த கணேசபிள்ளை அவர்கள் ஆலயத்தை சீமெந்து கட்டங்களால் புதுப்பித்து பிரம்மஶ்ரீ சிவசர்மா அவர்களை கொண்டு விநாயகப் பெருமான் அருளாலே கும்பாபிடேகத்தினையும் நடாத்துவித்தார். 1972ம் ஆண்டிலே மூன்று பேர் கொண்ட நிர்வாக சபையிடம் ஆலயப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இராஜகோபுரம்
தம்பையா அவர்களின் மருகர் செம்பாரியார் என அழைக்கப்பட்ட முருகேசு சிதம்பரப்பிள்ளை விநாயகப்பெருமானுக்கு இராஜகோபுரம் அமைக்கவிரும்பி 1945ம் ஆண்டு ஊர்மக்களிடம் பிடியரிசி காணிக்கையாய் பெற்று சுன்னாகத்திருந்தும் வெள்ளைக்கற்களை கொண்டுவந்து அத்திவாரம் இட்டு இராஜகோபுர வேலையினை செய்வித்தார்.
பணநெருக்கடி காரணமாய் அவரது முயற்சி பூரணம் பெறவில்லை. அன்னாரின் முயற்சி நனவாக்கவும், விநாயகப்பெருமானுக்க மணிமண்டபம் ஒன்றையும் 1981இல் அமைக்க விரும்பினர், அவரது வாரிசுகள். தெல்லிப்பழை துர்க்காதேவி அறங்காவலர் தலைவரும், சைவத்திற்கு தமிழிற்கு பெரும் தொண்டாற்றியவருமாகிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களிடத்தே தங்கள் வேண்டுகொளைத் தெரிவித்தனர்.
தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், தென்னிந்தியாவிலிருந்து சிற்பாச்சாரியர்களை வருவித்து 06-06-1981ம் ஆண்டு கோபுர வேலைகளை ஆரம்பித்து வைத்தார்கள்.
கும்பாபிடேகம்
காரைநகர் மக்களின் உதவியோடு, 1982ம் ஆண்டு முதலாம் மாதம் 31ம் திகதி மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், ஐந்து தள இராஜ கோபுரத்திற்கும் கும்பாபிடேகம் நடைபெற்றது.
தேர்
தமிழ் புத்தாண்டு தினத்தை இரதோற்சவமாக கொண்டு பத்து நாள் மகோற்சவம் இவ்வாலயத்தே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தே அதிக ஈடுபாடு கொண்டிருந்த சி. கந்தையா என்பார் விநாயகப்பெருமானுக்கு தேக்கு மரத்தாலே தேர் ஒன்று அமைக்க விரும்பி தென்னிந்தியாவிலிருந்து மூன்று ஆச்சாரியார் குடும்பங்களை அழைத்து வந்து மூன்று வருடங்களாய் தேரினை செய்வித்தார். இத்தேரிற்கு 1926ம் ஆண்டிலே வெள்ளோட்டம் நடைபெற்றது. இன்று வரையில் அத்தேர் அவருடைய பரம்பரையினராலே நன்கு பராமரிக்கப்பெற்று தேர்த்திருவிழாவும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.
நித்திய நைமத்திய பூசைகள்
நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வந்த இவ்வாலயத்தே இடப்பெயர்வு காரணமாய் 1991 இலிருந்து 1997 எரை எவ்வித பூசனைகளும் நடைபெறவில்லை. இறைவன் திருவருளாலே 1997ம் ஆண்டு ஆவணி மாதம் அந்தரித பிரதிஸ்ட மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. அதன்பின்னர் ஆலய நித்திய பூசைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டன.
காரைநகர் மக்களுக்கு அருள்பாலித்து அமர்ந்திருக்கின்றார் காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்