மருதநிலத்தின் மத்தியில் மேட்டுநிலத்திலே பலநூற்றண்டுகளுக்கு முன்னர்
ஒரு சிறு மூர்த்தமாய் முருகப்பெருமானை இவ்வூர் மக்கள் வழிபட்டு வந்தனர். இவ்வூரிலே வாழ்ந்த காசிநாதர் என்பாருக்கு திடீரென கண்ணொளி போய்விட்டது. முருகப்பெருமான் மீது தீராத அன்புகொண்ட காசிநாதர் அவனருளால் தன் கண்பார்வை மீளக்கிட்டும் என்று தளராத மனமுடையராய் முருகப்பெருமானை வேண்டித் தவமிருந்தார். திக்கரை முருகன் அவர் அன்பால் கட்டுண்டு கண்ணொளி கொடுத்ததாக ஒரு கர்ணபரம்பரைக்கதை உண்டு.
இத்திருவருட் செயலை கேள்வியுற்ற கிராமத்தாரும் காசிநாதரும் கந்தப்பெருமானுக்கு ஒரு கோயில் அமைக்க முற்பட்டனர். இறைவன் அருளோடும் மக்களின் ஆதரவோடும் சிறுகோயில் ஒன்று இப்போது விசாலமாய் காட்சிதரும் கோயிலிருக்கும் இடத்தில் எழுப்பப்பெற்றது. வயல் மேட்டிலே இருந்த முருகப்பெருமானை கோயிலில் பிரதிட்டை செய்து வழிபடத்தொடங்கினர்.
1880ம் ஆண்டு நிருவாகப்பொறுப்பை ஏற்ற கனகசபை காசிநாதர் சிறு மடாலயமாயிருந்த ஆலயத்தை தனது பெருமுயற்சியினாலே கல்லால் கட்டி 1902ம் அண்டு கும்பாபிடேகம் செய்தார். நித்தியபூசைகள் தவறாது நடப்பதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். 1904ம் ஆண்டு ஊரவர்கள் சிலர் சேர்ந்து காணிச்சாக்கை 15 பரப்பும் மணாக்கை 10 பரப்பும் கொண்ட நெற்காணி ஒன்றை வாங்கி கோவிலுக்கு தருமசாதனம் செய்தனர். அக்காணியிலிருந்த வந்த வருவாய் நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய நடக்கவும், அன்னதானம் வழங்கவும் வழிவகைசெய்தது. இவ்வாலயம் மீண்டும் 1928 இல் திருத்தவேலைகள் செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது.
பின்னர் மீளவும் 1964இல் பெருமளவிலான திருப்பணிவேலைகள் செய்யப்பெற்று 1974 இல் கும்பாபிடேகம் நடைபெற்றது.
இவ்வாலயத்திலே ஒழுங்காக நித்தியபூசைகளும், கந்தபுராணப் படிப்பு என்பனவும் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்