கடம்பவிருட்சத்தை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலய வரலாற்றைப்பற்றி ஆராயுங்கால் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளமும், நிலவளமும் மக்கள் வளமும்
கொண்ட இக்கிராமத்திலிருந்து கந்தயினார் என்ற பெயருடைய பெரியார் ஓருவர் கதிர்காமக்கந்தப் பெருமானைத் தரிசிகும் வேட்கை மிக்கவராய் அங்கு மகோற்சவம் நிகழும் காலமாகிய ஆடித்திங்களில் புறப்பட்டு பாதயாத்திரையாகச் சென்ற போது வழியிலே மதங்கொண்ட யானையொன்று அவரைத்துரத்த அவர் காட்டிற்குள் ஓடி வழிதிசை தெரியாது அலையலானார் இறுதியில் களைப்பும் பசியும் மிகுந்தவராய் மரம் ஒன்றின் கீழ் நித்திரையில் ஆழ்ந்திருந்த வேளையில் அவர்முன்னால் துறவி ஒருவர் தோன்றி “வேல் ஒன்றை அவர் கையிற் கொடுத்து இதனைத் துணையாகக் கொண்டுசெல், நீ கதிரமலைக் கந்தனைச் சென்றடைவாய்” என்று கூறிச் சிறிது தூரம் வழியுங்காட்டி மறைந்தருளினார். அவர் காட்டியவழியிற் சென்ற ஆராமையோடு கதிர்காமக் கந்தனைத் தரிசித்து மீண்ட கந்தயினார் துறவியாற் பெற்றவேலாயுதத்தை நீர்வேலியிலே தாபித்துச் சிறயதோர் ஆலயத்தையும் தோற்றுவித்தார். இவ்வாலயம் வேற்கோட்டமென அழைக்கப்படலாயிற்று.
நீர்வேலியில் ஸ்தாபிதமான வேற்கோட்டத்திலே கிரமமாகப் பூசைகளும் புராணபடனங்களும் நடைபெற்று பக்தியைப்பெருக்கும் சமய பிரசங்களும் நடைபெறும். இது இறைபக்தியைப் பெருக்கும் நிலையமாக அமைந்து வரலாயிற்று. இந்தநிலையிலே, தென்மராட்சிப்பகுதியில் கொடிகாமம் என்னும் இடத்தில் கந்தப்பெருமானுக்கு ஆலயம் ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கந்தசுவாமி விக்கிரகம் ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படாதிருந்தது. ஏதோ தடை நிலவியவேளையில், குறித்த விக்கிரகம் அவ்விடத்து அடியார் ஒருவரின் இல்லத்தில் நெற் கூடையினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. அந்த விக்கிரகத்தை நீர்வேலிக் கிராமத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் கந்தயினார், நல்லையினார் என்னும் இருவர் சிறிய பணம் கொடுத்துப் பெற்றுவந்து வேற்கோட்டம் அமைந்த இடத்திலிருந்து 300 யார் தொலைவில் 1852 இல் ஆலயம் அமைத்து அங்கு குறித்த விக்கிரகத்தை முறையாகப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் இயற்றுவித்தனர் வேற்கோட்டத்திலிருந்த வேலாயுதமும் புதிய ஆலயத்தில் குடிபுகுந்தது.
குறித்த கந்தயினார், நல்லையினார் என்னும் இரு சகோதரர்களால் 1852 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பரிபாலனஞ் செய்யப்பட்டு வந்த இவ்வாலயம், 1896 இல் மூவர் கொண்ட தர்ம கர்த்தா சபையாலும், 1918 இல் அறுவர் கொண்ட சபையாலும் பரிபாலனஞ்செய்யபட்டு வந்தது. 1968 இல் புதிய பரிபாலன சபையொன்று தோற்றம் பெற்று, ஆலய பரிபாலனத்தைச் சிறப்பாக செய்துவருகின்றது. ஆலய முகப்பில் ஈசான திசையில் கந்தப்பெருமானுக்கு உகந்த கடம்ப விருட்சம் தல விருட்சமாக அமைந்திருக்கும் சிறப்பு ஆலயத்துக்கு மிகவும் சிறப்புத் தருவதாகும்.
சித்திரைப் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாகக் கொண்டு ஆரம்பத்தில் 10 நாள் மகோற்சவமும் 1924 இல் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டதிருந்து 19 நாள் மகோற்சவமும் நடைபெற்று வருகின்றது. யாழ்பாணத்திலே வடமொழி தென்மொழி ஆகம இதிகாசங்கள் யாவற்றையும் ஐயந்திரிபுறக் கற்றுணர்ந்த நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவ சங்கர பண்டிதர் அவர்களால் 1830 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட புராண படனமானது இன்றும் இவ் வாலயத்தில் நடைபெற்று வருவது குற்ப்பிடத்தக்கது. மேலும், இவ்வாலயத்துக்கு முருகப் பெருமானுக்கு உகந்த சித்திரத்தேர் ஒன்று ஆகம, சிற்ப விதிகளுக்கு அமைய உருவாக்கப்பட்டு அதில் வள்ளி, தெய்யானை சமேத முருகப்பொருமான் ஆரோகணித்து துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ்செய்யும் சிறப்பைக் காணாத கண்களும் கண்களா?
இவ்வாலயத்தில் விநாயகர், சிவலிங்கம், உமாதேவி, சிவகாமி சமேத நடேசப் பெருமான், மூலவரான வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகப்பெருமான், வைரவர், பழனியாண்டவர் ஆகிய மூர்த்திகளுக்குச் சந்நிதானங்களும் நவக்கிரக வழிபாட்டாலயமும் அமைந்த போராலயமாக இவ்வாலயம் விளங்குகின்றது. ஈழத்தில் சிறந்து விளங்கும் முருகன் ஆலயங்களில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. இவ்வாலயத்தில் சித்திரை மாதத்தில் வருடாந்த மகோற்சவமும், மற்றும் மாதாந்த உற்சவங்களாக வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணிச் சதுர்த்தி, ஆவணிமூலம், புரட்டாதி சனி, நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், குமாராலய தீபம், மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் என்பவற்றோடு நடேசரபிஷேகம், நால்வர் குருபூசை என்பனவும் நடைபெற்று வருகின்றன. மேலும் கதிர்காம உற்சவத்தின் போது விசேட அபிஷேகம் ஆராதனைகளும், கந்தசஷ்டி உற்சவகாலங்களில் கொடியேறித் திருவிழா நடைபெறும் ஆலயமாக விளங்குவது சிறப்பு அம்சமாகும். வேலும், வேட்டைத் திருவிழாவின் போது ஊரின் தெற்கெல்லையில் அமைந்துள்ள பழம் பெருமைமிக்க நாச்சிமார் கோயிலடியில் சுவாமி வேட்டையாடி வருவது மிகவும் சிறப்புடையதாகும். இவ்வாலய வடக்கு வீதியில் பூங்கொல்லையும், தென்கிழக்குப் பக்கத்தில் தீர்த்தக்கேணியும், தீர்த்தக் கேணியின் பக்கத்தில் சுவாமி இளைப்பாறும் மண்டபமும், தீர்த்தக் கேணியின் ஒரு புறத்தில் பழனிமலை போன்ற அமைப்பின் மேலமைந்த கோயில் கட்டடத்தில் “ பழனி யாண்டவர்” கோயிலும், அமைந்துள்ளமை ஆலயத்துக்கு மேலும் சிறப்பு தருவதாயமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலத்துக்குக் காலம் சமய பிரசங்கங்களும், புராண படனங்களும், சமய வகுப்புகளும், சமய மலர் வெளியீடுகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்குரியனவாகும். இவ்வாலய பூசா கருமங்களை ஆரம்பகாலத்தில் சுப்பையாக் குருக்களும், அவரின் பின் அவர்தம் பரம்பரையினரும் சிவாச்சாரியர்களாக இருந்து நித்திய, நைமித்திய பூசைகளைச் சிறப்பாக நடாத்தி வந்தனர். இன்று அதே பரம்பரையில் வந்த சுவாமிநாத இராசேந்திரக் குருக்கள் அவர்களே அருள் மனம் கமழச் சிறப்பாகச் செய்து வருகின்றார். மேலும், தீராத நோய் தீர்த்தருளும் இம்முருகன் சந்நிதானத்தில் நோயென்று வருபவர்களுக்கு விபூதி போட்டு, நூல்கட்டி சுகப்படுத்தும் கைங்கரியத்தைக் குருக்கள் அவர்கள் பாரம்பரியமாகச் செய்து வருவது போற்றுதற்குரியதாகும்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் தமிழறிஞர்கள், சமயப் பெரியார்கள் குறிப்பாக கி.வா.ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் இங்குவந்து தரிசனம் செய்தது கிராமத்துக்குப் புகழ்தரும் விடயமாகும்.
நாமும் முருகப் பெருமானின் பேரருளை வேண்டுவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்