ஈழவள நாட்டிலே அமைந்திருக்கின்ற ஆலையங்களில் மிகவும் பழமை வாய்ந்தனவும் புராதனமானமானவையுமான ஆலயங்களில் பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலையமும் ஒன்றாகும்.ஆங்கிலேயர் தொகுத்து வைத்திருந்த அரச பதிவேடுகளில் இவ்வாலயத்தைப் பற்றிய குறிப்புக்களை காண முடிகின்றது.
அன்னை பராசக்தியை பற்பல திருக்கோலங்களிலும், காளி, துர்க்கை, ஈஸ்வரி எனப் பற்பல நாம கரணங்களிலும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அவற்றுள் முத்துமாரி என்ற மூர்த்தமும் ஒன்று. மக்கள் மிகப் புராதன காலம்தொட்டு தொற்றுநோய், பஞ்சம், வரட்சி போன்ற துன்ப நிகழ்வுகள் தம்மை அடையாது பாதுகாக்க முத்துமாரி அம்மனை வழிபட்டு வருகின்றார்கள்.
இக்கோயிலின் ஸ்தாபகம் பற்றி சரியான தகவல்கள் இல்லாது போனாலும்
பல கர்ணபரம்பரைக்கதைகள் மக்களிடையே உலாவி வருகின்றன. தமிழரசர் காலத்து இவ்வாலயம் போர்த்துக்கேயர் காலத்தே அழிக்கப்பட்டு அம்மன் சிலை எங்கென்று தெரியாது மறைந்திருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிகால நடுப்பகுதியளவிலே பெருங்குடிவேளாளன் கட்டமாதன் என்பான் ஒருவன் வேலணை பெருங்குளத்து வடகரையில் உலாவி வரும்நேரம், கற்புலம் என்ற பகுதியில் ஆவரசம், நொச்சி பற்றை ஒன்றினுள் முத்துமாரி அம்மன் கற்சிலை ஒன்றை கண்டெடுத்தார் என்றும், அந்த கட்டமாதனும் ஊர் மக்கள் சிலரும் சேர்ந்து அந்த கற்சிலையை அவ்விடத்தில் இருந்து தூக்கி சென்று தற்போது ஆலயம் உள்ள பகுதிக்கு தெற்கே. நெடுங்கேணி என்று பெயருடைய காணித் துண்டில குடிசை அமைத்து அதனுள் அம்மன் சிலையை பிரதிட்டை செய்து வழிபட்டு வந்ததாகவும் அதன் பின் பெரிய ஆலையம் அமைக்கும் கருத்துக்கொண்டு தற்போது உள்ள இடத்துக்கு கொண்டு வந்ததாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை சொல்கின்றது. அக்கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலைய பழைய ஆலய சிலையாய் இருக்கலாம்.
குடிசையில் இருந்த அம்மனுக்கு கல்லால் ஆலயம் அமைக்க விரும்பி புங்குடுதீவினைச் சேர்ந்த காசித்தம்பி என்பார் தற்போது ஆலயம் இருக்கின்ற இடத்திலே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறுபது பரப்பு காணியினை வாங்கி அவ்விடத்திலே அம்மனுக்கு கல்லாலும் சுண்ணாம்பினாலும் கோயிலமைத்து அம்மனை பிரதிட்டை செய்து மக்கள் அனைவரும் வந்து வழிபடும் வண்ணம் வசதிகள் செய்து வைத்தார்.
அதன்பின்னர் 1885-1890 காலத்தே, காசித்தம்பி ஆலயம் அமைத்து ஏறத்தாள எண்பது ஆண்டுகளின் பின்னர் யாதவராயர் இராமநாதன் என்பார் பழைய கோயிலை இடித்துவிட்டு, அவ்விடத்தே ஆகம விதிப்படி தூபி அர்த்த மண்டபம், சபா மண்டபம், மகா மண்டபத்தோடு கூடிய கோயிலை எழுப்பினார். கல்லால் கட்டப்பட்டு ஒலையால் வேயப்பட்டிருந்த இவ்வாலயத்திற்கு அதே காலத்தே கதிர்காமம் ஆறுமுகம் என்பார் ஒடு வேய்ந்ததோடு கொடித்தம்பம் ஒன்றையும் அமைத்தார். வயிரமுத்தர் என்பார் யாக மண்டபம் ஒன்றும் கட்டினார். அதேகாலப்பகுதியில் வேலணையூர் விஸ்வகரும குலத்தார் முன்வந்து அம்பாளுக்கு வசந்த மண்டபம் ஓன்றை அமைத்து கணிக்கை ஆக்கினார்கள். அடுத்து வேலணை செட்டிபுலத்து பரத குலத்தார் முன்வந்து குறையாக கிடந்த
சுற்றுமதிலை கட்டி முடித்து அம்பாளுக்கு காணிக்கை ஆக்கினார்கள். அதைத்தொடர்ந்து சுந்தர் வயிரவநாதர் என்பார் கட்டுத்தேர் ஒன்றைக் கட்டுவித்து ஆலயத்துக்கு வழங்கினார்.
1910ம் ஆண்டு அளவில் ஐயம்பிள்ளை காத்திகேசு என்பார் முத்துமாரி அம்பாளின் உள் வீதியில் வட மேற்கு மூலையில் தனது ஒரு சுப்பிரமணியர் கோயிலும், அதன் அருகே ஒரு சனீஸ்வரர் கோயிலும் அமைத்ததோடு ஆலையத்தையும் பெருப்பித்தார் 1915 ஆண்டளவில் ஆலையத்துக்கு நிரந்தர வருமானம் இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் பெயரில் 25-11 1915ம் திகதி ஆலம்புலம் என்ற பெயருடைய மூன்று துண்டு
காணியை தர்மசாதனம் எழுதிக் கொடுத்தார்.
1930ம் ஆண்டளவில் கோயிலை புனருத்தாரணம் செய்ய தீர்மானித்து ஊர்ப் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி இராமலிங்க உடையார் தலைமையில் பழைய கோயினை இடித்துவிட்டு புதிய கோயில் ஒன்றைக் கட்டினார்கள். கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், சபாமண்டபம், மாமண்டபம், பலிபீடம், ஆகிய சகலதும் வெள்ளைக்கல் திருப்பணியாகச் அமைக்கப்பட்டன. திருப்பணி யாவும் நிறைவேறி 1936ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
1938ம் ஆண்டில் திருத்தொண்டர் பிள்ளையினார் வெள்ளைக் கற்களால் ஆலய உள்வீதியில் தென்மேற்கு முலையில் ஒரு பிள்ளையார் கோவிலைக் கட்டி முடித்தார். அடுத்த பத்துவருடத்துக்குள் உள்வீதி மண்டபமும், மடப்பள்ளியும், வாகனசாலையும் அமைத்து திருப்பணியை நிறைவு செய்தார்.
1940ம் ஆண்டளவில் த. சிவகுருநாதன் என்பார் தேர் முட்டியையும். அதன்பின் யாழ்வாத்தகர் காசிலிங்கம் என்பார் கோபுர வாசல் வெளிமண்டபத்தையும் கட்டி முடித்தார்கள். 1948 ம் ஆண்டளவில் மெய்யடியார் செல்லப்பா சுவாமி அவர்கள் அப்பாளுக்கு தெற்பக்குளம் அமைத்து நாலு சுற்றும் கல்லால் கட்டி முகப்பில் மடம் ஓன்று கட்டி அதற்கு நால்வர் மடம் என்று பெயரிட்டு. மடத்தின் வடக்கு தொங்கலில் சிவன் விக்கிரகம் அமைத்து கோவிலாக்கி மடத்தின் மத்தியில் தெற்பக்குளத்தை பார்த்தபடி பெரிய லிங்கம் ஒன்று அமைத்து லிங்க வழிபாடு செய்ததோடு மேற்குப்புறம் வாழைதோட்டமிட்டு அம்பாளின் ஆலைய வெளிப்புறத்தைப் பொலிவுறச் செய்தார்.
1973ம் ஆண்டளவில் தில்லையம்பலம் அவர்கள் தலையையில் அமைக்கப்பட்ட தேர்த்திருப்பணிச்சபையின் செயல்பாட்டால் ஒர் அழகான சித்திரத்தேர் 1976ல் அமைக்கப்பட்டு அம்பிகை சித்திரத் தேர் உலா வந்தாள். அதேகாலப்பகுதியில் தில்லையம்பலம் அவர்கள் தனது சொந்த செலவில் ஆலய வடக்கு வீதியில் ஒரு அன்னதான மடம் ஒன்றையும் கட்டிமுடித்தார்.
2002ம் ஆண்டு வருடாந்த ஆடிமாத உற்சவ காலத்தில் நிகழ்ந்த ஒரு அருள்விளையாட்டு. கடந்த பல ஆண்டுகளாக பாவனையில் இருந்து வந்த மடல் சம்பறம் மக்கள் புலம்பெயர்வால் பாவிக்க முடியாத நிலைக்கு வந்ததால். திருவிழா உபயகாரரால் ஒரு புதியமடல் சப்பறம் செய்து இம்முறை பாவனைக்குதயாராகி இருந்தார்கள். சப்பறம் அனைத்துப் பாகங்களும் பொருத்தப்பட்டது. 9ம் திருவிழா இரவு அதை இழுக்கவேண்டும். ஏழாம் திருவிழாவன்று தற்காலிகமாக தேர்வடத்தைப் பயன்படுத்த எண்ணிய நிர்வாகம். தேர்வடத்தை வெளியே கொண்டுவர முயற்சிக்கும் வேளையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. நிவாகத்துக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. மறுநாள் சப்பறம் இழுக்கவேண்டும். புதிதாய்த் தேர்வடம் வாங்க குறைந்தது 100000.00 ரூபா பணம் வேண்டும் போய்தேடி வாங்க நேரம் பற்றாக்குறை. இந்த நிலையில் பெருங் கவலையுடன் இம்முறைக்கு பக்கத்தூர். கோவிலில் கடன் வாங்குவோம் என்ற முடிவோடு இரவு கழிந்தது. காலை நேரம் எட்டுமணி 18-20வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர் ஓட்டமாய் ஓடிவந்து ஆலைய குருக்களின் கதவைத்தட்டி தாங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது பாம்பு போல் ஒரு பொருள் தமக்கு தெரிந்ததாகவும். தட்டி பார்க்க அது தேர்வடம்போல் தெரிவதாகவும் இழுக்க முடியவில்லை, இயன்றவரை இழுத்து வந்து கரையில் ஒருபகுதியைச்சேர்துள்ளோம். ஆட்கள் வந்தால் மிகுதியையும் இழுத்து ஏற்றிவரலாம் என்று ஆலயகுருவுடம் சொல்ல குரு நிர்வாத்திடம் தெரிவிக்க நிர்வாகம் உழவுயந்திரமும் ஆட்களும் கொண்டு சென்று கரையை அடைய கடலில் கிடந்த மிகுதியை இழுத்தெடுக்க வந்தது 750 மீற்றர் நீளமான தேர்வடம். இதை அறிந்த மக்கள் ஆலையத்தை நாடி அம்பிகையின் அருளை திருவிளையாட்டை கண்டும் கேட்டும் பரவசமாகினர். அடுத்தநாள் காலையில் வெளிவந்த அத்தனை பத்திரிகையும் தேர்வடப் படத்துடன் செய்திகளை வெளியிட்டு அம்பாள் அருளை பறைசாற்றினர் எனலாம்.
இத்துணை அருள் கொண்ட அம்பிகையின் ஆலயத்துக்கு இராஜகோபுரம் இல்லாதகுறை தீர்க்க இராஜகோபுர திருப்பணிச் சபை ஒன்றை உருவாக்கி கிராமத்தை சேர்ந்த வர்தகப்பெருமக்களின் உதவியுடனும். அம்பிகையின் மேல் பற்றுகொண்ட புலம்பெயர்மக்களின் உதவியுடனும் ஏழுதள இராஜ கோபுரம் அமைக்கப்பட்டு 2010ம் ஆண்டு கும்பாபிடேகம் நடைபெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்