சித்தர்கள் பெரும்பாலும் சங்கேத மொழியில் பேசுபவர்கள். இவர்கள் பேசுவதைப் புரிந்துகொண்டால், நாம் பல ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். மக்களுக்கு நன்மை புரியும் சித்தர்களை மக்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். இவர்களின் சக்தியோ அளப்பரியது. இதற்கு உதாரணமாக எத்தனையோ
சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் சுமார் ஐம்பது சித்தர்களின் ஜீவசமாதிகள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. அவற்றில் ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள் ஜீவசமாதியும் ஒன்று.
எப்போதும் இவர் ஒரு கம்பளிப் போர்வையைத் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தபடியால் மக்கள் இவரை கம்பளிச் சித்தர், கம்பளிச் சாமியார் என்று அழைத்தனர்.
இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்தவர் என்று கூறப் படுகிறது. இவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவராம். தன் ஆட்காட்டி விரலாலேயே சுருட்டைப் பற்ற வைத்துக் கொள்வாராம்.
ஒருமுறை இவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தபோது, அதன் விஷம் இவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அந்தப் பாம்புதான் இறந்து கிடந்தது. நீரில் மிதப்பது, நீருக்குள் வெகுநேரம் மூழ்கியிருப்பது, ஓரிடத்தில் மறைந்து வேறொரு இடத்தில் தோன்றுவது போன்ற சித்துக்களில் வல்லவர்.
வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்ட பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறு மாம். இவருக்கு ரசவாத வித்தையும் தெரியும் என்பர். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை கொண்டவரல்ல.
இந்த சித்தர் 1874-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், வெள்ளிக்கிழமை ஜலசமாதி ஆனார். மறுநாள், “கம்பளி தண்ணியிலே, கம்பளி தண்ணியிலே’ என்ற அசரீரி கேட்ட மக்கள், இவருக்கு சமாதிக் கோவில் எழுப்பினர். சமாதிமீது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர்.
தற்போது இந்த சமாதிக் கோவிலை, வெளிநாட்டில் இருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.
இக்குடும்பத் தலைவர் மேல்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது மனைவியும், மருமகளும் தமிழ்ப் பெண்மணிகளாவர். இவரது மகன் ஒரு தமிழ் மகனாகவே வளர்க்கப்பட்டவர்.
கம்பளிச் சித்தர் கோவில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோவிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம்.
கம்பளிச் சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதி உள்ளது.
கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேரே- வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது.
பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச் சந்நிதிகளில் விநாயகரும் முருகப் பெருமானும் அருள்புரிகின்றனர்.
இங்குள்ள தெய்வச் சிலைகள் அனைத்தும் கலைநயம் மிக்கவை. முருகனுக்கு எதிரிலுள்ள மயில் வாகனமும் புதுமையாக வடிக்கப்பட்டுள்ளது.
முருகன் சந்நிதியைக் கடந்து வந்தால் கஜலட்சுமி தனிச்சந்நிதியில் அருளாட்சி செய்வதைக் காணலாம். வழக்கமாக, கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகள் இருக்கும். இங்கு எதிரில் ஒரேயொரு யானை மட்டும் காணப்படுகிறது. இந்த யானையும் புதுமையாக- அழகாக வடிக்கப்பட் டுள்ளது.
அடுத்து சென்றால், ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் சக்தியும் வீற்றுள்ளனர். வெண்கலத்தினாலான இவர்களது சிலை நம் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது.
கோவிலின் வெளிப்புறம் உள்ள பரந்த வெளியில் ஒரு பக்கம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் உள்ளன. இன்னொரு பக்கம் பிள்ளையார், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் கலைநயத்துடன் காட்சி அளிக்கின்றன.
ஆஞ்சனேயரின் திருவுருவம் கனிவான முகத்துடன் காட்சி அளிக்கின்றது. இன்னொரு பக்கம், கம்பளிச் சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன. அகத்திய முனிவரின் சிலையும் உள்ளது.
பரந்த வெளியின் முகப்பில் காணப்படும் ஓர் அழகிய வெண்கலச் சிலை பிரமிப்பூட்டுகிறது. சிவனும் சக்தியும் ஒரு அக்கினி வளையத்தின் நடுவே ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
சிவபெருமானின் ஆட்காட்டி விரல்நுனி பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை; உயரத் தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம்; கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம்… மிக அழகு!
மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன்- சக்தி உருவங்கள்! முப்பது அடிக்கு மேலே உள்ள இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது.
அக்கதவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே- அதாவது சிவராத்திரி அன்று மட்டுமேதிறப்பார்கள். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு சிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள்.
சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்கிறார்.
பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணி நேரம் பூஜை நடக்கிறது. பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குகிறார். சிவன்- சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. இவ்வட்டத்தைச் சுற்றி பக்தர்கள் தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லிய வண்ணம் வேண்டிக் கொள்கின்றனர். சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளைத் தாங்கியபடி சிவபெருமானைப் போற்றிய அந்தக் காட்சி, காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியாகும்.
பூஜை முடிந்த பிறகு, பக்தர்கள் பாதாள லிங்கத்தை தரிசிக்கலாம். இந்த அரிய வாய்ப்பு மகா சிவராத்திரி அன்று மட்டுமே கிடைக்கும்.
ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமி களின் சமாதிக் கோவில், புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில்- இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகில் ருத்ரபூமிப் பகுதியில் உள்ளது.
ஒருமுறையேனும் அங்கு சென்று வழிபட்டு வந்தால் மனதில் ஆனந்தமும் நிம்மதியும் நிச்சயம் பிறக்கும். இறைவனின் அருளும் சித்தரின் ஆசியும் நம்மை நலமாக வாழ்விக்கும்!
சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா
55
நீண்டுயர்ந்த மலைகளிலேயே ஆரோக்கியமும் அமைதியும் மேலோங்கி இருக்கின்றன. மலைகளிலே காணப்படும் மரம், செடி, கொடிகள் அனைத்தும், மானுட நோய்களையும் கர்மவினைகளையும் நீக்கி, நமது பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவுகிறது.
பொதுவாக மூலிகைகளை சித்தர்கள் இரண்டாகப் பிரிக்கிறார்கள். சாதாரண நோய்களையும், கடுமையான நோய்களையும் குணப்படுத்தக் கூடிய மூலிகைகள் ஒரு வகை; உடலை அழியா நிலைக்குக் கொண்டு போகக்கூடிய காயகல்ப மூலிகைகள் இன்னொரு வகை. நம் தமிழ்நாட்டில் உள்ள மலைகளில்- முக்கியமாக பொதிகை மலை, கொல்லி மலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட பல்வேறு மலைகளில் சாதாரண மூலிகைகளும் உடலை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும் கற்ப மூலிகைகளும் நிரவிக் கிடக்கின்றன.
“ஓம் சரவணபவ’ வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன்- நான் எழுதிய மூலிகைகள் பற்றிய குறிப்புகள் அனைத்து தரப்பு மக்களும் பக்குவம் அறிந்து எளிதில் பயன்படுத்தும் வண்ணம் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.
உடலை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும் கற்ப மூலிகைகள் மலைகளில் ஏராளமாக இருக்கின்றன. உதாரணமாக, சதுரகிரி மலையில் பூமியில் எங்கும் காணக்கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற மரங்கள் உள்ளன. இவை இறவாமைக்கு முடிவுரை எழுதும் உன்னத மருத்துவ குணம் கொண்டவை.
அதேபோல் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு போன்றவற்றை நீக்கும் கருநெல்லி மரங்களும் கற்ப மூலிகை களாய் வலம் வருகின்றன. அதேபோல் மலைகளில் உருவாகும் சுனை நீரால் பல்வேறு வியாதிகள் தணிவதை மலையேறி சிவதரிசனம் காணும் அன்பர்கள் உணரலாம்.
மலைகளில் உருவாகும் சுனைகளில் நமது உடம்பிற்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் கள் ஆகியன வெகுவாக நிரவி இருப்பதைப் பருகி உணரலாம். கற்ப மூலிகைகள் நம் கண்களுக்குப் பட்டால் கூட அப்படியே எடுத்து உபயோகித்து விட முடியாது. அதை அனுபவம் உடையோர்களின் துணையோடு சென்று, அந்த மூலிகைகளுக்கு காப்பு கட்டி, வணங்கி சில நியதிகளை வகுத்து அதை மருந்தாகக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உடலை அழியா நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
சிவாம்சம் பொருந்திய மலைகளில் சுணங்க விருட்சம் என்றொரு மரம் உண்டு. இதன் வேர் கருப்பாகவும், அதன் பழம் நாய்க்குட்டிபோலவும் இருக்கும். அந்தப் பழம் பழுத்து கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பதுபோல ஓசை கேட்கும். அப்படி விழுந்த பழம் பத்து வினாடிகளில் மறுபடியும் குரைத்துக் கொண்டு மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் சுனை எருமை விருட்சம் பற்றி சற்று அறிந்து கொள்வோம். சுனை எருமை விருட்சத்தின் அடியில் போய் யாராவது நின்றால், எருமை கனைப்பதுபோல் ஒலி கேட்கும். அந்த மரத்தைக் குத்தினால் பால் வரும். இதனையும் குரு- சிஷ்ய நியதி அடிப்படையில் மருந்தாக்கி மகத்துவம் பெற இயலும். அதேபோல் நாகபட கற்றாழை என்றொரு மூலிகை உண்டு. பார்ப்பதற்கு நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதுபோல் தோன்றக் கூடியது. உடம்பில் உள்ள நச்சுகளை முழுமையாகக் குணப்படுத்தும் தன்மை இந்த கற்றாழைக்கு உண்டு.
இன்னுமொரு மூலிகை உண்டு. இதன் பெயர் அழுகினிச் செடி. இதன் இலைகளிலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்துகொண்டிருக்கும். இதனை கற்ப மருந்தாக உட்கொள்ளும் பொழுது உடல் உறுப்புகளை வலுப்படுத்தும்; மனபயம் போக்கும்.
அதேபோல் தொழுகன்னி என்றொரு மூலிகை உண்டு. இந்த மூலிகை சூரியன் செல்லும் திசையெல்லாம் திரும்பிப் பார்த்து தனது மரியாதையை வெளிப்படுத்தும். இதனை மருந்தாகக் கொண்டால் குரு- சிஷ்ய உறவு பலப்படும்.
ஒருவருடைய நாவண்மை, சொல்வண்மை, செயல்வண்மை ஆகியவற்றை மேம்படுத்தி சகல சித்துக்களையும் அளிக்கக்கூடிய மூலிகை சாயா விருட்சம். இம்மரத்தின் நிழல் பூமியில் எங்குமே விழுவதில்லை. இம்மரத்திற்கு அபார காந்த சக்தி உண்டு. இம்மரத்தின் அருகே அமர்ந்து அதனையே உற்று நோக்கிப் பெறும் தியான உணர்வானது சிவதீட்சைக்கு ஒப்பாகும். சிவலயம் பொருந்திய மலைகளில் உள்ள சஞ்சீவி மூலிகை, பற்றற்றவர்கள் கண்களுக்கு மட்டுமே புலப்படும். இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்றொரு பெயரும் உண்டு. அதாவது இந்த ஸ்தூல உடலை அழியா நிலைக்குக் கொண்டு சென்று, ஆணவம், மாயை, கண்மம் என்ற முக்குணங்களை அழித்து பிறவி இல்லா பெருநிலையை அடையச் செய்யும்.
ரோம வேங்கை என்றொரு மரம் உண்டு. இது பார்ப்பதற்கு வேங்கை மரம்போல் காட்சி தரும். இதன் விழுதுகள் கவரிமான் ரோமம்போல் சடை சடையாய் தொங்கும். இது உடம்பில் ரத்த வலிமையை உண்டாக்கி முக்திக்கு முத்தான வழிகாட்டும். இப்படிப்பட்ட பல்வேறு மூலிகைகள் சிவன் அருளிய மலைகளில் காணக் கொடுத்து வைத்தவர்களுக்குதான் காணக் கிடைக்கும்.
பதினெண் சித்தர்களும், இறவா நிலையில் சிவலயத்துடன் இன்னும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார் கள். மானுட ஆரோக்கிய மேன்மைக் காக இன்றும் மூலிகை சார்ந்த தங்களது கருத்துகளை சில சுத்த ஆத்மாக்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். சித்தர்கள் மனிதர்களுக்கு நேரடியாகத் தென்பட மாட்டார்கள். சில நேரங்களில் பறவைகளாகவோ, விலங்குகளாகவோ, புல் பூண்டு களாகவோகூட காட்சி தருவார்கள்.
ஆக, சித்த மருத்துவம் என்பது வைத்தியம், யோகம், ஞானம் ஆகிய மூன்றைப் பற்றிப் பேசக்கூடிய ஓர் அற்புதமான மருத்துவ முறையாகும். இதுவரை வைத்தியம் பற்றிப் பேசி வந்த- எழுதி வந்த யாம் மறுபடியும் சித்தர்களின் யோகங்களையும், அவர்கள் சார்ந்த ஞான நிலைகளையும் தேடி அலைந்து சேகரித்து, இனிவரும் காலங்களிலும் மறுபடியும் வாசகர்களாகிய உங்களை சந்திக்கிறேன்.
கடந்த ஐந்தாண்டு காலமாக எழுதப்பட்டு வந்த கட்டுரைத் தொடரை இத்துடன் நிறைவு செய்கிறேன். வாசகர்களாகிய அனைவருக்கும் எம்பிரான் சிவனும், பதினெண் சித்தர்களும் உடல், மனம், ஆன்மா லயம் பெற ஆசி வழங்கட்டும் என வேண்டி விடைபெறுகிறேன்.
வாழ்க வளமுடன்!
(முற்றும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்